பழனி
பழனியருகே 18ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான ஓலைச்சுவடிகளை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்துவருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள வேலூர் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது 18ம் நூற்றாண்டை சேர்ந்த 250ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்ததாவது:-
மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பழனி பகுதி பழங்காலத்தில் முக்கிய நகரமாகவும், கொங்குநாடு, சேரநாடு மற்றும் பாண்டியநாடுகளை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்கியுள்ளது.எனவே இப்பகுதியில் ஏராளமான தொல்லியல் ஆதாராஙகள் கிடைத்துள்ளன. இதன்வரிசையில் தற்போது 18ம் நூற்றாண்டை சேர்ந்த ஓலைச்சுவடி ஒன்று கிடைத்துள்ளது. இந்த ஓலைச்சுவடியில் வடமொழியில் உள்ள லிங்க புராணம், ருத்ரபுராணம் மற்றும் நந்திபுராணம் ஆகியவற்றை தழுவி எழுதப்பட்டுள்ளது என்றும், இதில் 21பாயிரப்பாடல், 14சர்க்கம், 649பாடல்கள் மூலமும் உரையுடனும் தெளிவாக எழுதப்பட்டுள்ளதாகவும், அப்போதைய பிரெஞ்ச் கம்பெனியை சேர்ந்த கிளாரெட் துரை, கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஆங்கிலேயர் பெங்களூர் துரை மற்றும் பழனி பகுதியை சேர்ந்த வரதப்பநாயக்கர் என்ற ஜமீந்தாருக்கும் இடையே நடந்த மோதலில் ஏற்பட்ட சமரச உடன்படிக்கையை கொண்டாடும் வகையில் 1794ம் ஆண்டு ஆனந்தவருடம், புரட்டாசி மாதம் 5ம்தேதி சிதம்பரம் பண்டாரம் என்பவரால் எழுதப்பட்டதாக குறிப்பு உள்ளது என்றும், ஆனால் அவர்கள் யார், அவர்களுக்குள் என்ன மோதல் என்பது குறித்து தெளிவு இல்லை என்றும், மிகுந்த சேதமடைந்துள்ளதால் ஓலைச்சுவடிகளை பக்குவமாக ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தால் அக்காலத்தின் வரலாறு தெரிய வாய்ப்பு உள்ளது என்றும் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்தார். சுமார் முன்னூறு ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது