தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவம், உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி, எங்கே தான் இருக்கிறார் நித்தி? -இன்னும் பல முக்கியச் செய்திகள் !!

பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நான்கு பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் மெஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்ற அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார். வழக்கை விரைந்து விசாரிக்கும் பொருட்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்க மெஹபூப்நகர் மாவட்ட நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குற்றம் எப்படி நடந்தது என்பதை நடித்துக்காட்டச் சொல்லியுள்ளனர். அப்போது இன்று காலை 5 மணியளவில் நான்கு பேரும் போலீஸை தாக்கி தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதனால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் பலியாகினர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் எரித்துக்கொல்லப்பட்ட அதே இடத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.


உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்குவதாக இருந்தது.

இதற்கிடையில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் நிறைவு பெறவில்லை. எனவே அதனை முழுமை செய்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவை அவசர வழக்காக நேற்று விசாரிக்கப்பட்டது.